"ஒவ்வொரு தொகுதியிலும் கோஷ்டிப் பூசல் இருக்கு, இதனால் வெற்றி பாதிக்கும் அப்படின்னு எழுதியிருக்கீங்க. அது உண்மைதான். இந்த கோஷ்டிப் பூசல் கட்சியில் யாரால் அதிகரிச்சதுங்கறதையும் நீங்க எழுதினால் நல்லாயிருக்கும் சார்'' என நம்மிடம் பேசினார்கள் ஆளும்கட்சி யின் சில நிர்வாகிகள்.
வடமாவட்டத்தின் மிக முக்கிய நிர்வாகிகள் மூவர் நம்மிடம், “கட்சியில் மா.செ., மாநகர/ந.செ/பேரூர் செயலாளர்கள், ஒ.செ. என்பவர்கள் மிக முக்கியமானவர்கள். மாவட்ட ஆட்சியர்களைவிட பவர்புல்லாக வலம்வருபவர்கள் தி.மு.க. மா.செ.க்கள். கடந்த காலங்களில் நகரச்செயலாளர், ஒன்றியச் செயலாளர், பேரூர் செயலாளர்களை அந்தந்த தொகுதி எம்.எல்.ஏ.க்கள் மதிப்பார்கள், மாவட்டச்செயலாளர்களும் முக்கியத்துவம் தருவார்கள். இப்போது, அதாவது கடந்த 5 ஆண்டுகளில் அப்படியே தலைகீழாகி விட்டது. எம்.எல்.ஏ.க்கள்தான் எங்களுக்கு முக்கியம் என அமைச்சர்கள், மாவட்டச் செயலாளர்கள் நினைக்கிறார்கள். சில அமைச்சர் கள், மா.செ., ஒன்றியம், நகர, பகுதிச் செயலாளர்களே வேண்டாம், எம்.எல்.ஏ.க்கள் போதும் என மறைமுகமாகச் சொல்கிறார்கள். இந்த ஆட்சியில் எம்.எல்.ஏ.க்களுக்கு வேலைகளை வாரி வாரித் தந்துள்ளார்கள், கட்சியை நடத்தும் எங்களுக்கு கிள்ளித்தந்தார்கள். கடந்த 4 ஆண்டு காலத்தில் எம்.எல்.ஏ.க்கள்- அவர்கள் பினாமி பெயரில் நடந்த ஒப்பந்தப்பணிகளின் பட்டியலை எடுத்துப்பார்த்தாலே நாங்கள் சொல்வது உண்மையா, பொய்யா என்பது தெரிந்துவிடும்.
கூட்டுறவு, ஊராட்சி, நகராட்சி, சமூகநலத்துறை என பல்வேறு துறைகளில் நேரடி பணி நியமனத்தில் கட்சியின்கீழ் நிர்வாகிகளின் வாரிசுகளுக்குத் தரவேண்டும் என மாவட்டச்செயலாளர்கள், அமைச்சர்களிடம் கேட்டோம். அதனை பெரும்பாலான அமைச்சர் கள், எம்.எல்.ஏ.க்கள் நிறைவேற்றவேயில்லை. பக்காவாக ரேட் போட்டு விற்பனை செய்தார்கள். எங்களிடம் கேட்டிருந்தால் நாங்களே அந்த வேலைக்கு என்ன தரவேண்டுமோ... கூடவோ, குறைச்சலாகவே வாங்கித் தந்திருப்போம். ஆனால் எதிர்க்கட்சியான அ.தி.மு.க., பா.ஜ.க. பிரமுகர்களை சமாதானப்படுத்த வேண்டுமென அவர்களுக்கு பணிகளை சும்மாவே தந்தார்கள். இப்படி நாங்கள் வஞ்சிக்கப்பட்டது குறித்து தலைவருக்கு பலமுறை பல மாவட்டங்களைச் சேர்ந்த கட்சியின் அடிமட்ட நிர்வாகிகள் மனுக்களாக தந்தார்கள். தலைவரும் மூன்றுமுறை, அடிமட்டத் தொண்டர்கள், நிர்வாகிகள் மிகமுக்கியம் எனப் பேசியும் பெரும்பான்மை அமைச்சர்கள், மா.செ, எம்.எல்.ஏ.க்கள் அதனைக் கண்டுகொள்ளவே யில்லை. கட்சியின் நிர்வாகிகளுக்கு குறைந்தபட்ச மரியாதைகூட தராதவர்களாகவே பெரும்பான்மை எம்.எல்.ஏ.க்கள் இருக்கிறார்கள். இது ஏதோ எங்கள் தொகுதி எம்.எல்.ஏ.க்கள் என்றில்லை, தமிழ்நாட்டிலுள்ள எங்கள் கட்சியின் 80% எம்.எல்.ஏ.க்கள் அப்படித்தான் இருக்கிறார்கள்.
கடந்த சட்டமன்றத் தேர்தலின்போது விருப்பமனு தந்தவர்களை சிட்டிங் எம்.எல்.ஏ.க்கள் அப்படியே ஒதுக்கி அவர்களை விரக்திக்கு தள்ளிவிட்டார்கள். அதிலும் முட்டிமோதி ஒன்றிய சேர்மன்கள், பேரூராட்சி, மாநகராட்சி சேர்மன்களாக, மேயர்களாக வந்தவர்களையும் சம்பாதிக்கவோ, நிர்வாகம் செய்யவோ விடவில்லை. எங்களைப்பத்தி நாலு வார்த்தை பத்திரிகையில், டி.வி.யில் வந்துவிட்டால் அப்படியே ஒதுக்கி கட்டம்கட்டி டேமேஜ் செய்கிறார்கள். நாங்கள் பெயரெடுத்தால், சம்பாதித்தால் அடுத்துவரும் தேர்தலில் தமக்குப் போட்டியாக வந்துவிடுவார்கள் என குறிவைத்து நசுக்கினார்கள் சிட்டிங் எம்.எல்.ஏ.க்கள். அதற்கு அமைச்சர்களும் உடந்தை''’என்றனர்.
டெல்டா மாவட்டத்தைச் சேர்ந்த முக்கிய நிர்வாகி ஒருவர் நம்மிடம், "எங்கள் குறைகள், கோரிக்கைகளை தலைவர், சின்னவருக்கு கொண் டும்போகலாம் என நாங்கள் அறிவாலயத்துக்கோ, அன்பகத்துக்கோ, தலைமைச்செயலகத்துக்கோ சென்றால் எம்.எல்.ஏ.க்கள், மா.செ.க்களை மட்டுமே அனுமதிப்போம் என்கிறார்கள் அங்குள்ள நந்திகள். உங்கள் கோரிக்கையை, கடிதமாக எழுதித்தந்து விட்டு போங்க என்கிறார்கள். நாங்கள் எழுதித் தரும் கடிதம், நாங்கள் ஊருக்கு வந்துசேரும் முன்பே சம்பந்தப்பட்டவர்களின் வாட்ஸ்ஆப்பில் உள்ளது. எங்களை அழைத்து அதனைக் காட்டி கன்னாபின்னாவென திட்டுகிறார்கள். இப்படி யிருந்தால் நாங்கள் யாரை நம்பி எங்கள் மனக்குமுறலை வெளிப்படுத்துவது? தொண்டர்கள், கீழ்மட்ட நிர்வாகிகளின் புலம்பலை கேட்கக்கூட தலைமைக்கழகத்தில் யாருமில்லை என்பது வேதனையாக இருக்கிறது.
வரும் சட்டமன்றத் தேர்தலில் 10 கோடி ரூபாய் இருந்தால் சீட் கேட்கச்சொல்லி தலைமை சொல்லச்சொன்னதாக மண்டலப் பொறுப்பாளர் கள் சிலர் சொல்கிறார்கள். தலைமை சொன்னதா என எங்களுக்குத் தெரியாது. நாங்கள் பொறுப் பாளர்கள் சொல்வதைத்தான் நம்பமுடியும். பணமில்லைன்னா நாங்கள் எதுக்கும் ஆசைப்படக் கூடாதா? உழைப்பவர்கள் உழைத்துக்கொண்டே இருக்கவேண்டும், பணம் இருப்பவர்கள் மட்டும் பதவி அனுபவிக்கவேண்டுமா? பதவியில் இருப்பவர்கள் எங்களை சம்பாதிக்கவிட்டிருந்தால் இப்போது நாங்களும் தைரியமாக செலவு செய்கிறோம் எனச் சொல்வோமே. மாவட்டத்துக்கு ஒரு அமைச்சர் இருக்கிறார். அது அதிகாரப்பூர்வ மானது. ஆனால் எங்களைப் பொறுத்தவரை தொகுதிக்கு ஒரு அமைச்சர் அதாவது ஒவ்வொரு எம்.எல்.ஏ.வும் அமைச்சராகவே தங்களை நினைத்துக்கொண்டு இப்போதுவரை வலம்வரு கிறார்கள். அவர்கள் விவகாரத்தில் அமைச்சர்களும் தலையிடுவதில்லை. எம்.எல்.ஏ.க்கள் இப்படிதான் செயல்படுகிறார்கள் என தலைமைக்குத் தெரிந்தும் கண்டுகொள்ளவில்லை. ஆட்சியமைத்த முதல் இரண்டாண்டுகள் மட்டும் எம்.எல்.ஏ.க்கள் - அமைச்சர்களின் செயல்பாடுகளுக்கு மதிப்பெண் தந்தார் முதலமைச்சர். சரியாகச் செயல்படாதவர் களை கண்டித்தார் என தகவல்கள் கிடைத்தன. அதன்பின்?
கடந்த நான்காண்டு காலத்தில் மக்கள் மனதில், கட்சியினர், கட்சி நிர்வாகிகள் மனதில் இடம்பிடித்த எம்.எல்.ஏ.க்கள் யார்? யார்? என பட்டியலெடுத்து தலைமை மதிப்பெண் போடட்டும். நன்றாகச் செயல்படும் எம்.எல்.ஏ.க் களை விட்டுவிட்டு சரியாகச் செயல்படாத
மக்கள் மத்தியில், கட்சியினர் மத்தியில் நல்ல பெயரில்லாத எம்.எல்.ஏ.க்களை மாற்றி, அடுத்தடுத்து கட்சியில் இருப்பவர்களுக்கு வாய்ப்பு தரவேண்டும். அப்படி தந்தால்தான் 20 ஆண்டுகள், 30 ஆண்டுகளாக பணம் செலவு செய்து, கட்சியை வளர்க்கும் நிர்வாகிகளான எங்களுக்கு ஒரு வாய்ப்பாவது கிடைக்கும். அதைப் பார்த்து அடுத்த தலைமுறையினர் கட்சியில் தானாக இணைந்து உழைக்கவருவார்கள். அப்படிச் செய்யாமல் திரும்பத் திரும்ப தொகுதியில் ஒருவருக்கே சீட் தந்துகொண்டிருந்தால் அந்த தொகுதியிலுள்ள மற்ற தகுதியான நிர்வாகிகள் எல்லாம் கட்சிக்கு தேவையில்லைபோல என எண்ணிவிடுவார்கள்.
தேர்தல் நேரத்தில் நிர்வாகிகளின் தகுதிக்கேற்ப பணத்தை தூக்கிப் போட்டால் போதும், 20 நாளைக்கு உழைப்பான், அப்போது இந்த அதிருப்தியெல்லாம் இருக்காது என எம்.எல்.ஏ.க்கள் நினைக்கிறார்கள். சுயமரியாதை கற்றுத்தந்த எங்கள் இயக்கத்தில் மரியாதை தராமல் நடந்துகொள்ளும் சிட்டிங் எம்.எல்.ஏ.க்களுக்கு மீண்டும் சீட் தந்தால் கண்டிப்பாக பாடம் கற்றுத்தருவோம். தலைமை எங்கள்மீது நடவடிக்கை எடுத்தாலும் பரவாயில்லை என்கிற மனநிலைக்கு வந்துள்ளோம்''’என்கிறார்கள்.
இப்படிப்பட்ட உள்குமுறல்கள் வட மாவட்டங்களில் மட்டுமல்ல, தமிழ்நாடு முழுவதுமே பாதிக்கப்பட்ட ஆளும்கட்சியினரின் மனதில் உள்ளது.
_____________
கையில காசு, வாயில தோசை!
ரெடி கேஷா 10 கோடி வச்சிருக்காரா? 20 கோடி செலவு செய்வாரா? என்பதை பார்த்து அப்படிப்பட்டவருக்கு சீட் சிபாரிசு செய்யுங்கள் என இ.பி.எஸ் சொன்னதாக அ.தி.மு.க. மாவட்டச்செயலாளர்கள், முன்னாள் அமைச்சர்கள் பகிரங்கமாக எங்களிடம் சொல்கிறார் கள் என புலம்புகிறார்கள் அ.தி.மு.க.வைச் சேர்ந்த கட்சியின் மாவட்ட அளவிலான நிர்வாகிகள். வரும் தேர்தலில் சீட் தாங்க என 7,988 பேர் விருப்பமனு தந்துள்ளனர். இவர்களில் பெரும்பாலானவர்கள் இப்போது விரக்தியில் உள்ளார்கள்.
இதுபற்றி நம்மிடம் பேசிய வேலூர் மாவட்டத் தைச் சேர்ந்த நீண்டகால அ.தி.மு.க. நிர்வாகிகள் இருவர், "எங்கள் கட்சியின் பலமே யாருக்கு வேண்டுமானாலும் சீட் கிடைக்கும் என்பதுதான். நீ மாவட்டச் செயலாளர், மந்திரி, எம்.பி., எம்.எல்.ஏ. என யாராக வேண்டுமானாலும் இருந்துக்கோ, நான் புடிச்சிவைச்சா தான் நீ பிள்ளையார், இல்லன்னா சாணி எனச் சொல்லாமல் செயல்பட்டவர்கள் எம்.ஜி. ஆரும், ஜெ.வும். அதுக்குத் தகுந்தமாதிரி சைக்கிள் கடைக்காரர், டீ கடைக்காரர், ஆட்டோ ஓட்டிக்கிட்டு இருந்தவருக்கெல் லாம் சீட் தந்து தலைமை மொத்தமாக செலவுசெய்து வெற்றிபெறவைத்து எம்.பி., எம்.எல்.ஏ.வாக்கினார்கள். 100 ரூபாய் கையில் இல்லாதவர் களுக்கு மா.செ. பதவி தந்து மாதாமாதம் செலவுக்கு பணமும், காரும் தந்து கட்சியை நடத்தச்சொன்னார்
ஜெ. அப்படிப்பட்ட கட்சியில் இப்போது பொதுச்செயலாளராக இருக்கும் இ.பி.எஸ். வரும் சட்டமன்றத் தேர்தலில் பணம் மிக முக்கியம். தேர்தல் செலவுக்கு பணமிருந்தால் சீட் கேளுங்கள் எனச் சொல்வது எந்தவிதத்தில் சரி? யாருக்கு வேண்டுமானாலும் சீட் கிடைக்குமென்கிற நம்பிக்கையில் கட்சியின் அடிமட்டத் தொண்டன் இப்போதுவரை உழைப்பதாலே இந்தக் கட்சி இதுவரை இருக்கிறது. இப்படி யொரு சிஸ்டம் வேறெந்த கட்சியிலும் கிடையாது. இப்போது 10 கோடி ரூபாய் தேர்தல் களத்தில் வேட்பாளர் செலவு செய்யவேண்டும், மீதி தலைமை தரும் எனச்சொல்வது எந்தவிதத்திலும் சரியில்லை. இப்படியிருந்தால் இந்த கட்சி இன்னும் சில ஆண்டுகளில் காணாமல் போய்விடும்''’என புலம்பினார்கள்.
-கிங்
/nakkheeran/media/agency_attachments/2025/05/19/2025-05-19t062512996z-nkn-png-logo-640x480-nakkheeran-adops.png)
/nakkheeran/media/agency_attachments/2025/05/19/2025-05-19t062422400z-nkn-png-logo-640x480-nakkheeran-adops.png)
/nakkheeran/media/member_avatars/sites/default/files/pictures/2019-02/02 Raja.jpg)
/nakkheeran/media/media_files/2026/01/29/dmk-2026-01-29-17-09-03.jpg)